Site icon Arul Isai

கற்பூர நாயகியே கனகவல்லி – அம்மன் பாடல் வரிகள்

கற்பூர நாயகியே கனகவல்லி – அம்மன் பாடல் வரிகள்

கற்பூர நாயகியே! கனகவல்லி!காளி மகமாயி! கருமாரி அம்மா!பொற்கோவில் கொண்ட சிவ காமியம்மா!பூவிருந்த வல்லி தெய்வானையம்மா!விற்கால வேதவல்லி விசாலாட்சி!விழிக்கோல மாமதுரை மீனாட்சி!சொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே!சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே!

(கற்பூர)

புவன முழுதாளுகின்ற புவனேஸ்வரி!
புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி!
நவநவமாய் வடிவாகும் நாகேஸ்வரி!நம்பினவர் கைவிளக்கே ஸர்வேஸ்வரி!
கவலைகளைத் தீர்த்துவிடும் காளீஸ்வரி!காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி!
உவமான பரம்பொருளே ஜகதீஸ்வரி!
உன்னடிமைச் சிறியேனை நீயாதரி!

(கற்பூர)

உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்த
உறைவிடத்தில் முறையிடுவேன் தாயே! எந்தன்
அன்னையவள் நீயிருக்க உலகில் மற்ற
அன்னியரைக் கெஞ்சிடுதல் முறையோ அம்மா!
கண்ணீரைத் துடைத்துவிட ஓடி வாம்மா!
காத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா!
சின்னவளின் குரல்கேட்டுன் முகம் திருப்பு!
சிரித்தபடி என்னைத் தினம் வழி அனுப்பு!

(கற்பூர)

கண்ணிரண்டும் உன்னுருவே காண வேண்டும்!
காலிரண்டும் உன்னடியே நாட வேண்டும்!
பண்ணமைக்கும் நா உனையே பாட வேண்டும்!
பக்தியோடு கையுனையே கூடவேண்டும்!
எண்ணமெல்லாம் உன் நினைவே ஆக வேண்டும்!
இருப்பதெல்லாம் உன்னுடையதாக வேண்டும்!
மண்ணளக்கும் சமயபுர மாரியம்மா!
மகனுடைய குறைகளையும் தீருமம்மா!

(கற்பூர)

நெற்றியினுள் குங்குமமே நிறைய வேண்டும்!
நெஞ்சினுலும் உன் திருநாமம் வழியவேண்டும்!
கற்றதெல்லாம் மேன் மேலும் பெருக வேண்டும்!
கவிதையிலே உன் நாமம் வாழ வேண்டும்!
சுற்றமெல்லாம் நீடுழி வாழ வேண்டும்!
ஜோதியிலே நீயிருந்து ஆள வேண்டும்!
மற்றதெல்லாம் நானுனக்குச் சொல்லலாமா!
மடிமீது பிள்ளை என்னைத் தள்ளலாமா!

(கற்பூர)

அன்னைக்கு உபசாரம் செய்வதுண்டோ!
அருள் செய்ய இந்நேரம் ஆவதுண்டோ!
கண்ணுக்கு இமையின்றிக் காவலுண்டோ!
கன்றுக்கு பசுவின்றி சொந்தமுண்டோ!
முன்னைக்கும் பின்னைக்கும் பார்ப்பதுண்டோ!
முழுமைக்கும் நீ எந்தன் அன்னையன்றோ!
எண்ணெய்க்கும் விளக்குக்கும் பேதமுண்டோ!
என்றைக்கும் நானுந்தன் பிள்ளையன்றோ!

(கற்பூர)

அன்புக்கே நானடிமையாக வேண்டும்!
அறிவுக்கே என் காது கேட்க வேண்டும்!
வம்புக்கே போகாமல் இருக்க வேண்டும்!
வஞ்சத்தை என் நெஞ்சம் மறக்க வேண்டும்!
பண்புக்கே உயிர் வாழ ஆசை வேண்டும்!
பரிவுக்கே நானென்றும் பணிய வேண்டும்!
என்பக்கம் இவையெல்லாம் இருக்க வேண்டும்!
என்னோடு நீ என்றும் வாழ வேண்டும்!

(கற்பூர)

கும்பிடவோ கையிரண்டும் போதவில்லை!
கூப்பிடவோ நாவொன்றால் முடியவில்லை!
நம்பிடவோ மெய்தன்னில் சக்தியில்லை!
நடந்திடவோ காலிரண்டால் ஆகவில்லை!
செம்பவள வாயழகி உன்னெழிலோ!
சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை!
அம்பளவு விழியாலே உன்னை என்றும்
அடிபணியும் ஆசைக்கோர் அளவுமில்லை!

(கற்பூர)

காற்றாகி கனவாகிக் கடலாகினாய்!
கயிறாகி உயிராகி உடலாகினாய்!
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்!
நிலமாகி பயிராகி உணவாகினாய்!
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்!
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்!
போற்றாத நாளில்லை தாயே உன்னை!
பொருளோடும் புகழோடும் வைப்பாய் என்னை!

(கற்பூர)

SHARE:

Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
Share on linkedin
Share on email
Exit mobile version