பள்ளத்தூர் ஸ்ரீ பால விளத்தய்யனார் திருக்கோயில்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து சுமார் 11 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பள்ளத்தூரில் வயல்வெளிகளுக்கிடையே அமைந்துள்ளது இத்திருக்கோயில். அளகஞ் செட்டியார் காளி ஆயா படைப்பைச் சேர்ந்த இரணியூர் கோவில் ஏழு ஊர் பங்காளிகளுக்கு இக்கோவிலுள்ள பாலவிளத்தய்யனார் குலதெய்வமாக விளங்குகிறார்.
திருக்கோயிலின் அமைப்பு
கோயிலின் உள்நுழைந்ததும் இடது புறத்தில் ஸ்ரீ சித்தி விநாயகர் சன்னதியும் அதனருகில் அழகிய தெப்ப குளமும் உள்ளது. இத்தல இறைவனின் பெயர் ஸ்ரீ பாலவிளத்தய்யனார் இறைவியின் பெயர் ஸ்ரீ பூர்ணா, ஸ்ரீ புஷ்கலாம்பிகா. பிரகாரத்தில் பெரிய கருப்பர், சின்ன கருப்பர், அரசு முகம், சந்நியாசி, பேச்சியம்மன், கன்னிமார்கள், சின்னாஞ் செட்டியார், அளகஞ் செட்டியார் சந்நிதிகள் உள்ளன.
கோயில் வளாகத்திலுள்ள தூண்களில் அழகிய வேலைப்பாடுடன் கூடிய சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது, முன்முகப்பு மண்டபத்தின் மேல் 12 ராசிகளுக்கான சின்னங்களும் அழகுற வடிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் தினமும் நித்ய பூஜைகள் நடைபெறுகின்றன. பக்தர்களின் வேண்டுதல்கள்களின் பெயரில் அபிஷேகம், கோழி பூஜை மற்றும் கிடாவெட்டு ஆகிய பூஜைகள் நடைபெறுகின்றன.