ஆவுடையார்கோயில் ஸ்ரீ ஆத்மநாத சுவாமி மற்றும் மாணிக்கவாசகர் திருக்கோயில்

புதுக்கோட்டை மாவட்டம். அறந்தாங்கிக்கு தென்கிழக்கில் 14 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஆவுடையார்கோயிலில் அமைந்துள்ள அருள்மிகு யோகாம்பிகை உடனுறை ஆத்மநாத சுவாமி மற்றும் மாணிக்கவாசகர் திருக்கோயில்.
திருக்கோயிலின் அமைப்பு
இக்கோவில், சிற்பக்கலைக்கும் கட்டிடக்கலைக்கும் புகழ்பெற்ற தலமாகும். மேலும் வழக்கமான சிவன் கோவில்களின் கட்டமைப்பும், துணைத் தெய்வ வழிபாடுகளும் இல்லாமல், முழுமையாக மாறுபட்ட தனித்துவம் கொண்டதாக விளங்குகிறது.
தேவாரப் பாடல் பெற்ற இந்த பழமையான திருத்தலம். மாணிக்கவாசகர் திருவாசகத்தை இயற்றிய புனிதத் தலமாகும். இந்த ஆலயம் தற்போது திருவாவடுதுறை ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
சிவாலயங்கள் பெரும்பாலும் கிழக்கு அல்லது மேற்கு நோக்கி அமைந்திருக்கும். ஆனால் குருமூர்த்தமாக அமைந்த இத்திருக்கோயில் தெற்கு நோக்கி அமையப்பெற்றுள்ளது.
கோயிலின் உள்நுழைந்ததும் மேற்புறக் கொடுங்கையின் மேலே ஒரு குரங்கும் (கீழ்நோக்கியவாறு). ஒரு உடும்பும் (மேல் நோக்கியவாறு) செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.
முன் முகப்பு மண்டபத்தில் அற்புதமான வேலைப்பாடுடைய பெரிய மூர்த்தங்கள். நரசிம்மர், காளி. ஊர்த்துவதாண்டவர், பிட்சாடனர். வில் ஏந்திய முருகன். அகோர வீரபத்திரர், துவாரபாலகர் சிலைகள். குதிரை வீரர்களின் சிற்பங்கள் எனப் பலவும் எழிலுற அமைந்துள்ளன. மேற்கேயுள்ள மண்டபத்தில் மாணிக்கவாசகரின் மூலக்கோவில் உள்ளது. மாணிக்கவாசகர் கிழக்குமுகமாக எழுந்தருளி உள்ளார்.
அகோர வீரபத்திரரும் ரண வீரபத்திரரும் உட்புறமாகத் திரும்பியவாறு தரிசனம் தருகின்றனர். ஏழு நிலைகளைக்கொண்ட ராஜகோபுர வாயிலின் இருபுறமும் சாசனக் கல்வெட்டு பதிக்கப்பட்டுள்ளது.
வாயிலைக் கடந்து உள்சென்றால் சுந்தர பாண்டிய மண்டபத்தின் நடுப்பகுதியிலுள்ள தூண்களில் குதிரைச் சாமி என்ற அசுவநாத சிற்பமும், பாண்டிய மன்னன் சிற்பமும், மாணிக்கவாசகரின் அமைச்சர் கோலச் சிற்பமும், குறும்பர்கோன் சிற்பமும் உள்ளன. இடதுபுறம் மாணிக்கவாசகர் உற்சவ மூர்த்தி சந்நிதி. மாணிக்கவாசக பெருமானை முதலில் வழிபட்ட பிறகு தான் மூலஸ்தானத்தில் அரூபமாக இருக்கும் ஆத்மநாதரை தரிசிக்க வேண்டும் என்பது இக்கோவில் மரபு.
இவ்வாலயத்தின் மூலவராக ஆதி அந்தம் இல்லாத ஆதிசிவன் ஆத்மநாதராகவும். தாயாரான பார்வதி யோகாம்பாளாகவும் காட்சி தருகின்றனர். இத்தல விருட்சம் குருந்த மரம், தீர்த்தம் அக்கினித் தீர்த்தம்.
கருவரையில் ஈசன் அரூபமாகவும், அருவுருவமாக குருந்த மர வடிவிலும், உருவமாக மாணிக்கவாசகர் ரூபத்திலும் இருக்கின்றனர்.
இத்தல சிவபெருமான் வடிவம் இல்லாமல் அருள்பாலிக்கிறார். தலவிருட்சமான குருந்தமர வடிவில் குடிகொண்டுள்ளார். மூலஸ்தானத்தில் சதுர வடிவ ஆவுடையார் மட்டுமே அமைந்துள்ளது. அதன் மீது ஒரு குவளை சாத்தப்பட்டுள்ளது.
சந்நிதியின் பின்னால், 27 நட்சத்திரங்களை கொண்ட திருவாசி உள்ளது, அதன் மேல் மூன்று விளக்குகள் இடப்பட்டுள்ளன. இவ்விளக்குகள் சிவப்பாக அக்னியை, வெண்மை சூரியனை, மற்றும் பச்சை சந்திரனை குறிக்கின்றன என கூறப்படுகிறது.
ஆத்மநாத சுவாமியைப் போலவே அம்பாளும் அரூபமாக விளங்குவதால். உருவத்திருமேனி கிடையாது. பீடத்தில் யோகாம்பாளின் திருவடிகள் மட்டுமே. தங்கத்தாலான யந்திர வடிவமாக உள்ளது.
ஆத்மநாதரின் கருவறைக்கு நேர் பின்புறத்தில், நாலுகால் மண்டபத்தில், ஆத்மநாதர் யோகாசன மூர்த்தியாகவும், அவருக்கு எதிரில் மாணிக்கவாசகர் உபதேசம் பெறுவது போலவும், சிற்பங்கள் உள்ளன.
கோயிலில் மாணிக்கவாசகர் நந்தியின் அவதாரமாக கருதப்படுவதால். இங்கு நந்தி கிடையாது. கொடிமரம், பலி பீடம், தட்சிணாமூர்த்தி, உற்சவ மூர்த்திகள், ஆகியவை எதுவும் இல்லை. அதேபோல நவக்கிரக சந்நிதிகள் தனியாக இல்லை நவக்கிரக தூண்கள் வைக்கப்பட்டுள்ளன.
திருவாசகப் பாடல்கள் அனைத்திலும் இந்த ஊரானது திருப்பெருந்துறை என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது ஆவுடையார்கோவில்.
ஆனித் திருமஞ்சன நாளிலும் மார்கழித் திருவாதிரையிலும் மாணிக்கவாசகருக்கு உபதேசித்த காட்சி உற்சவம் நடைபெறுகிறது.
மாணிக்கவாசகருக்கு சிவனே குருவாய் வந்து உபதேசித்த தலம் என்பதால் இங்கு வந்து வழிபடுபவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதுடன், சிறந்த ஞானமும் பெற்று திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.