உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில்

தமிழ் நாட்டில் புகழ் பெற்ற நகரங்களுள் சிதம்பரம் ஒன்றாகும். தமிழ்நாட்டின் நாட்டியத்திற்கும், கட்டடக்கலைக்கும், பக்திக்கும் புகழ் பெற்ற நகரம் சிதம்பரம் ஆகும். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத்தலம், தரிசிக்க முக்தி தரும் தலம்பஞ்ச சபைகளில் பொற்சபையாக விளங்கும் தலம், ஆதாரத் தலங்களில் இருதய தலமாக விளங்கும் தலம், அம்பாள் இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தியாக காட்சி தரும் தலம். நடு இரவுக்குப் பின் அனைத்து லிங்கங்களின் சக்தியும் வந்து சேரும் திருமூலட்டானத் தலம். சைவர்களுக்கு கோவில் என்று அறியப்படும் தலம், இத்தகைய பெருமைகளைப் பெற்றிருக்கும் தலம் தான் சிதம்பரம்.

திருக்கோயிலின் அமைப்பு

தில்லைக் கூத்தப் பெருமான் திருக்கோயில் ஐம்பத்தொரு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்து விளங்குகின்றது. இத்திருக் கோயிலின் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய நான்கு பக்கங்களிலும் கம்பீரமான நான்கு ராசகோபுரங்கள் அமைந்து கோயிலை அழகு செய்கின்றன. ஒவ்வொரு கோபுரத்திலும் ஏழு தளங்களும், பதின்மூன்று பெரிய செப்புக் கலசங்களும் உள்ளது. 

ராச கோபுர வாயிலின் இரு பக்கங்களிலும் நாட்டிய முத்திரை என்று சொல்லப்படும் பரதக்கலை சிற்பங்கள் பொலிவுடன் காணப்படுகின்றன. எம்பெருமான் நடராஜர் தெற்கு முகமாக திருநடம் புரிந்தருள்வதால், தெற்குக் கோபுரத்தின் மேல் சுவாமியினுடைய கொடி கட்டப் பட்டிருக்கின்றது நடராஜப் பெருமான் தெற்கு முகமாக எழுந்தருளி யிருப்பினும், திருவிழாக் காலங்களில் சுவாமி புறப்பாடு முதலியவை கிழக்கு கோபுர வாயில் வழியாகவே நடைபெறுகின்றன. 

தில்லைத் திருத்தலத்தில் திருமூலட்டானக் கோயில் திருச்சிற்றம்பலம் என்னும் ஈரிடங்களில் இறைவன், இறைவி எழுந்தருளித் திகழ்கின்றனர். திருமூலட்டானக் கோயில் இறைவன் திருப்பெயர்கள் மூலட்டானேஸ்வரர், திருமூலநாதர், இறைவியின் பெயர் உமையம்மையார். ஆனந்த தாண்டவம் புரிந்தருளும் இறைவனின் பெயர் சபாநாயகர்,இறைவியின் பெயர் சிவகாமசுந்தரி. இத்தலத்தின் தலவிருக்ஷம் தில்லை மரமாகும். 

ஐந்து சபைகள்

இப்புனிதத் தலத்தில் ஐந்து சபைகள் உள்ளன அவை சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம், நிருத்தசபை, ராசசபை ஆகியன.  

சிற்றம்பலம்

நடராஜப் பெருமான் திருநடம் புரிந்தருளும் இடம் சிற்றம்பலம். இதனையே ‘சித்சபை என்பர். சித்சபையில் நிகழும் திருநடனத்தை சிவகாமசுந்தரியார் இடையிராது கண்டு மகிழ்வது ஆன்மாக்களின் பிறவி பிணியை போக்குவதற்கே இச்சிற்றம்பலத்திற்கு முதலில் பொன் வேய்ந்தவன் இரண்யவர்மன் என்று கோயிற் புராணம் கூறுகின்றது.
சித்சபையில் சபாநாயகரின் வலப்பக்கத்தில் உள்ளது ஒரு சிறு வாயில் இதில் உள்ள திரை அகற்றுப்பெறும். ஆரத்தி காட்டப் பெறும். இதனுள்ளே திருவுருவம் ஏதும் தோன்றாது. தங்கத்தால் ஆன வில்வ தளமாலை ஒன்று தொங்கவிடப்பட்டுக் காட்சியளிக்கும். மூர்த்தி இல்லாமலேயே வில்வதளம் தொங்கும். இதன் ரகசியம் இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதுதான். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. அவனை உணரத்தான் முடியும் என்பதே இதன் அர்த்தம்

பொன்னம்பலம்

சிற்றம்பலத்திற்கு முன் உள்ளது பொன்னம்பலம், எம்பெருமான் அபிஷேகம் கொண்டருளும் இடம். இங்குப் படிக இலிங்கத்திற்கு நாள்தோறும் ஆறுகால பூசையும், இரண்டாங்காலத்தில் இரத்தினசபாபதி அபிஷேக வழிபாடுகளும் நடைபெற்று வருகின்றன.

பேரம்பலம்

பேரம்பலம் என்பதனை தேவசபை என்றும் கூறுவர், இப்பேரம்பலத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர்.

நிருத்த சபை

நிருத்த சபை என்பது நடராஜப் பெருமானின் கொடி மரத்துக்கு தென்பால் உள்ளது, எம்பெருமான் ஊர்த்துவ தாண்டவம் செய்தருளிய இடம் இது, இங்கு அப்பெருமானின் திருமேனி காட்சி தருகின்றது.

ராச சபை

ராச சபை என்பது ஆயிரங்கால் மண்டபம். ஆனி, மார்கழி மாதங்களில் நடைபெறும் ஒன்பதாம் திருநாள்களிலும் நடராஜப் பெருமான் திருத்தேரில் எழுந்தருளி நான்கு வீதிகளில் உலாவந்த பின்னர், இரவில் இந்த ஆயிரங்கால் மண்டபத்தில் வீற்றிருந்து, விடியற்காலையில் அபிஷேகம் கொண்டருளப் பெற்று, பத்தாம் நாள் பிற்பகலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்குத் திருக்காட்சி அளித்து, பெருமான் முன்னவும் பெருமாட்டி பின்னவும் மாறி மாறி நடனம் செய்து கொண்டு சிற்றம்பலத்திற்கு எழுந்தருளுங் காட்சியே அநுக்கிரக தரிசனமாகும். அஃது இச் சபையின் முன்புதான் நிகழ்கின்றது.

வடக்கு கோபுரத்தின் அருகில் ஞான சக்தியாகிய சிவகாம சுந்தரி அம்பாள் திருக்கோயில் அழகாக அமைந்து, அருள் வழங்குகிறது. சிவகாம சுந்தரி அருள் மொழியும் திருநயனங்களோடு, அழகுமிகு திருக்கோலத்தில் கிழக்கு முகமாக நின்று, அடியார்க்குத் திருக்காட்சி தந்தருள்கின்றார். இதற்கு எதிரில் சிவகங்கை தீர்த்தக்குளம் உள்ளது.

ஸ்ரீமந் நடராஜ மூர்த்திக்கு வருடத்தில் ஆறு முறை மஹாபிஷேகம் நடைபெறுகிறது, இவற்றில் ஆனி திருமஞ்சனமும், ஆருத்ரா தரிசனமும், பஞ்ச மூர்த்தி வீதியுலாவுடன் தேர் திருவிழா நடைபெறும்.

அமைவிடம்

SHARE:

Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
Share on linkedin
Share on email