" செட்டிநாட்டின் சிற்பக்களஞ்சியம் " சிவபுரந்தேவி சமேத ஆட்கொண்டநாதர் திருக்கோயில்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருந்து பிள்ளையார்பட்டி செல்லும் சாலையில் கீழச்சிவல்பட்டி அருகே இரணியூரில் அமைந்துள்ள அருள்மிகு சிவபுரந்தேவி சமேத ஆட்கொண்டநாதர் திருக்கோயில். இரணியனை சம்ஹாரம் செய்த தோஷம் நீங்க சிவன் அருளிய தலம் என்பதால் இவ்வூர், ‘இரணியூர்” என்று அழைக்கப்படுகிறது.

திருக்கோயிலின் அமைப்பு

பெரிய ஐந்து நிலைகள் கொண்ட கோபுரத்துடன் மகா மண்டபம், அஷ்ட லட்சுமி மண்டபம் ஆகியவற்றுடன் அழகுற அமைந்துள்ளது. இக்கோயிலின் முன்மண்டபத்தில் இருந்து ஒரே சமயத்தில் சுவாமியையும், விமானத்தையும் தரிசிக்கும் விதமாக இத்திருக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலின் சிற்பவேலைபாடுகள் இக்கோவிலை “செட்டிநாட்டின் சிற்பக் களஞ்சியம்” என அழைக்கும் வகையில் அமையப்பெற்றுள்ளது. 

இவ்வாலயத்தின் இறைவன் ஆட்கொண்டநாதர், இறைவி சிவபுரந்தேவி, தல விருட்சம் வில்வம். இத்திருக்கோயிலில் மூலவரான ஆட்கொண்டநாதர் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார். அம்பாள் சிவபுரந்தேவி இரண்டு கரங்களுடன், தெற்கு நோக்கி காட்சி தருகிறாள்.

இரண்ய சம்ஹாரத்திற்கு பின் சினம் அடங்காத நரசிம்மரின் உக்கிரத்தை அடக்கி ஆட்கொண்ட தலம் என்பதால் ஆட்கொண்டநாதர் என்று அழைக்கப்படுகிறார். ஆட்கொண்டபின் சிவன் கோரமாக இருந்ததால் அவரை சாந்தப்படுத்த அம்பாள் சிவபூஜை செய்ததால் சிவபுரந்தேவி என்று அழைக்கப்படுகிறார்.

கோயிலின் மகா மண்டபத்தில் திருமாலின் பத்து அவதாரங்களும், நவ துர்கையின் ஒன்பது அவதாரங்களும் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.

இத்திருக்கோயிலின் பிரகாரத்தில் வித்தக விநாயகர், அம்பிகை, கஜ லக்ஷ்மி, நவகிரகங்கள், குதிரையில் அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் குபேரன், வாயு பகவான் மற்றும் பைரவர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.

பைரவர் இடதுபுறம் திரும்பிய நாய் வாகனத்துடன், கோரைப் பற்களுடன் காட்சி தருகிறார். இவருக்கு கார்த்திகை மாதத்தில் 6 நாட்கள் சம்பகசூர சஷ்டி விழா நடைபெறுகிறது.இவ்விழாவின் ஆறு நாட்களும் உற்சவமூர்த்தி பைரவர் மூலஸ்தானத்திற்குள் எழுந்தருளி பின்பு, பல்லக்கில் புறப்பாடாகிறார்.

விஷ்ணு, நரசிம்ம அவதாரத்தை ஆவேச வடிவத்தில் எடுத்தபோது, விஷ்ணுவின் சகோதரியான அம்பாள் தோற்றத்தைக் கண்டு தானும் உக்கிரம் அடைந்தாள். உக்கிரமானபோது உருவான திகள், சன்னதி எதிரிலுள்ள மண்டப தூண்களில் நவ திகளாக. காட்சி தருவதாகச் சொல்லப்படுகிறது.

இக்கோயிலில் பிரத்யேக மழைநீர் சேகரிப்பு அமைப்பு உள்ளது. பிப்ரவரி-மார்ச் மாதங்களில் மாசி மகம் நட்சத்திர நாளில் இறைவனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன.

அமைவிடம்

SHARE: