மனித முகத்துடன் அருள்பாலிக்கும் பால நரமுக விநாயகர்

முழு முதற் கடவுள் விநாயகப் பெருமானை பொதுவாக யானை முகத்தோடு காட்சிதருவதை பல தலங்களில் தரிசித்திருப்போம். ஆனால் அபூர்வமாக யானை முகம் அமைவதற்கு முன் பார்வதியால் படைக்கப்பட்ட மனித முகத்துடன் எழுந்தருளியுள்ள ஆதி விநாயகர், தமிழகத்தில் பூலோக கைலாசம் எனப்படும் தில்லை மாநகரான சிதம்பரத்திலும், திருச்சி மற்றும் திருவாரூர் மாவட்டத்திலுள்ள திலதர்ப்பணபுரி ஆகிய தலங்களில் அருள்பாலிக்கின்றார்.
தேரோடும் வீதியான சிதம்பரம் தெற்கு ரத வீதியில், தில்லை நடராஜர் ஆலயத்தின் தெற்கு கோபுர வாயிலின் மிக அருகில் சிறிய தனிக்கோயிலாக அமைந்துள்ளது பால நரமுக விநாயகர் திருக்கோயில். நரமுகம் என்பது மனித முகத்தைக் குறிக்கும் நரன் என்றால் வடமொழியில் மனிதன் என்பதாகும்.
வடக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோவிலில் முகப்பு மண்டபம் மற்றும் செவ்வக வடிவிலான கருவறையும் உள்ளது, விமானத்தின் மீது மூன்று கலசங்களும், கோவில் மண்டபத்தின் தூண்கள் சோழர் காலத்து வடிவமமைப்பை ஒத்தும் அமையப்பெற்றுள்ளது.
ஆலயத்தில் மனித முகத்துடன், நரமுக விநாயகராக, ஆதிவிநாயகராக மிகவும் அபூர்வமான தோற்றத்துடன் பக்தர்களுக்கு அருள் மழை பொழிகின்றார். வேறெந்த ஆலயத்திலும் இத்தகைய திவ்ய ஸ்ரூபத்தைக் காண இயலாது. மூலவரான விநாயகரை தவிர இவ்வாலயத்தில் ராகு கேது, ஆஞ்சநேயர், பெருமாள் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.
அனுமன், விநாயகர் இரு தெய்வங்களுமே புத்திக்கூர்மைக்குப் பெயர்பெற்றவை, இவ்விருதெய்வங்களும் ஒரே ஆலயத்தில் அருட்காட்சிதருவதால், கல்வியில் ஏற்பட்ட தடைகள் நீங்கவும், கடன் தொல்லைகளிலிருந்து விடுபடவும் இக்கோயில் அருள்புரிவதாக கூறப்படுகிறது.
குழந்தைகள் மற்றும் பள்ளி பருவத்தினருக்கு நல்ல ஞாபக சக்தியை அளிக்க வல்ல விநாயக மூர்த்தி என்பதால் தேர்வுக்குச் செல்லும் முன் தங்கள் தேர்வு எழுதுப்பொருட்களை விநாயகப் பெருமானின் முன் வைத்து, நல்ல மதிப்பெண் பெற வழிபட்டு செல்கின்றனர்.