திருக்கழிப்பாலை ஸ்ரீ பால்வண்ண நாதர் திருக்கோயில் - சிவபுரி பைரவர் கோயில்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரிலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிவபுரி எனும் ஊரில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் நான்காவது தலமாக விளங்குகிறது. இறைவனின் பெயர் பால்வண்ண நாதர், இறைவியின் பெயர் வேதநாயகி. இத்தலத்தின் தலவிருச்சம் வில்வம், தலதீர்த்தம் கொள்ளிடம்.
கொள்ளிட நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் தேவார காலத்து பழைய ஆலயம் அடித்துச் செல்லப்பட்டதால் அக்கோவிலில் இருந்த பால்வண்ணநாதேஸ்வரர் சிதம்பரத்திலிருந்து தென்கிழக்குத் திசையில் சுமார் 4 கி.மி. தொலைவிலுள்ள சிவபுரி என்ற தனது மற்ற பரிவார தேவதைகளுடன் தற்போது எழுந்தருளியுள்ளார்.
இத்தலத்தின் சிவலிங்கப் பெருமான் வெண்ணிறமுடையவராக விளங்கிறார், அதனாலேயே இறைவன் பால்வண்ண நாதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் அருட்காட்சி தருகிறார். இறைவன் இங்கு சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள மூலவருக்கு பால் அபிஷேகம் மட்டும் தான் மற்ற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்குத்தான் நடைபெறுகிறது. குதிரையின் கால் குளம்பு பட்டு பிளந்து போன வெண்ணிற லிங்கத்திற்கு தான் இன்றும் பூஜைகள் நடைபெறுகின்றன. லிங்கத்திற்கு பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் அருள்பாலிக்கின்றனர்.
மூன்று நிலைகளை கொண்ட ராஜ கோபுரத்துடன் இவ்வாலயம் காட்சி அளிக்கிறது. மூலவர் சந்நிதி நுழைவாயிலில் இருபுறமும் துவாரபாலகர்கள் காட்சி அளிக்கின்றனர். பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர், கஜலட்சுமி, விஷ்ணு, பிரம்மா, அகோர மூர்த்தி, முயலகன் மாறிய நிலையில் தெட்சிணாமூர்த்தி, கிராதமூர்த்தி, நாயன்மார்கள், சதுரா துர்க்கை, புவனேஸ்வரி ஆகியோர் உள்ளனர். இங்குள்ள நடராஜரின் சடைமுடி அள்ளிமுடிந்த கோலத்தில் உள்ளது. அருகில் சிவகாமியம்மன், தன் தோழிகளான விஜயா, சரஸ்வதியுடன் உள்ளது தனி சிறப்பாகும்.
இங்குள்ள பைரவர் காசியில் உள்ளது போல நாய் வாகனம் இல்லாமல், 27 மண்டை ஓட்டுடன், பூணூல் அணிந்து, சர்ப்பத்தை அரைஞான அணிந்து, ஜடாமுடி, சிங்கப்பல்லுடன் தனிக்கோயிலில் அருளுகிறார். இத்தல பைரவரை வணங்கினால் காசி பைரவரை வணங்கிய பலன் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. இத்தலத்தின் மூலவர் பால்வண்ண நாதர் என்றாலும் இப்பகுதி மக்கள் இத்தலத்தை பைரவர் கோயில் என்றே அழைக்கின்றனர். தேய்பிறை அஷ்டமி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ராகு கால பூஜைகள் விமர்சையாக நடைபெறுகிறது.