சித்திரகுப்தர் என்றும் 12 வயதாய் இருக்க வரம் பெற்ற ஆதிமூலேஸ்வரர் திருக்கோவில்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகரிலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவிலுள்ள அகரம் பரங்கிப்பேட்டை எனும் ஊரில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். திருக்கடையூரில் என்றும் பதினாறாய் இருக்க மார்க்கண்டேயர் வரம் பெற்றதுபோல், சித்திரகுப்தர் என்றும் 12 வயதாய் இருக்க வரம் பெற்ற தலமாக விளங்குகிறது. 
 

திருக்கோயிலின் அமைப்பு

அழகிய மூன்று நிலை ராஜகோபுரத்தின் கீழே கருங்கல்லாலான  மீன் உருவம் காணப்படுகிறது. திருக்கோயிலின் உள்நுழைந்தால் மகாமண்டபத்தில் கொடிமரம், பலிபீடம், பிரதோஷ நந்தி, விநாயகரை தரிசிக்கலாம், அர்த்த மண்டபத்தைக் கடந்து சென்றால், ருத்ராட்சப் பந்தலின் கீழ் லிங்க மூர்த்தமாக ஆதிமூலேஸ்வரர் காட்சி தருகிறார். அம்பாள் அமிர்தவல்லி நான்கு திருக்கரங்களோடு தனிச்சன்னதியில் கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறாள்.
 
இறைவனின் பெயர் ஆதிமூலேஸ்வரர், இறைவியின் பெயர் அமிர்தவல்லி. இத்தலத்தின் தலவிருச்சம் – வில்வம் மற்றும் வன்னி மரம், தலதீர்த்தம் – வருண தீர்த்தம், புராண பெயர் – வருண ஷேத்திரம். சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வடகிழக்கு திசையில் அமைந்துள்ள கோயில் இது. வேண்டுவோருக்கு அமுதம் போல அருளை வாரி வழங்குவதால் இத்தல அம்பிகைக்கு அமிர்தவல்லி என்று பெயர். 
 
வெளி பிரகாரத்தில் ராமேசுவரம் ராமலிங்கசுவாமி, காசி விசுவநாதர், துர்க்கை, நீலகண்டர், நீலாயதாட்சி, சக்தி விநாயகர், சுப்பிரமணியர், கடம்பன், பாதாள லிங்கம், கஜலட்சுமி, கால பைரவர், சூரியன், சித்திரகுப்தன் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.
 
சித்திரை மாதத்தில் முதல் ஏழு நாட்கள் சிவன், அம்பிகை மீது சூரிய ஒளி விழும். இந்நாட்களில் இங்குள்ள சூரியனுக்கு முதல் பூஜை செய்யப்படுகிறது. சித்ரா பவுர்ணமியன்று சித்திரகுப்தருக்கு விசேட அபிடேகத்துடன், பூஜை நடைபெறும். ஆயுள்விருத்தி பெற இவருக்கு தயிர் சாதம் படைத்து வணங்குகிறார்கள். மரணபயம் நீங்கவும், ஆயுள்விருத்தி பெறவும், நோய் தீரவும் இங்கு மிருத்யுஞ்ச ஹோமம் செய்து வழிபடலாம்.
 

அமைவிடம்

SHARE: