பேரையூர் அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயில்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், பொன்னமராவதி செல்லும் வழியில், சுமார் 13 கிமீ தொலைவிலுள்ள பேரையூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில்.
திருக்கோயிலின் அமைப்பு
கம்பீரமான பெரிய மதிற்சுவர்கள். அதன்மீது வரிசையாகக் கல்நாகர்கள் வைக்கப்பட்டுள்ளன. கோயில் எதிரே அமைந்துள்ளது திருக்குளம். உள்ளே பெரிய மண்டபம் காணப்படுகிறது, பெரிய மண்டபத்தைக் கடந்து சென்றால் துவாரபாலகர்கள் காணப்படுகிறார்கள். உள்ளே கொடிரம், பலிபீடம், நந்திவிக்ரகம் ஆகியவை காணப்படுகின்றன.
நந்தியை கடந்து உள்சென்றால் “ஓம்’ என்னும் வடிவில் இயற்கையாக அமைந்த புண்ணிய புஷ்கரணி, இது ஒரு சுனைநீர் ஆகும். பங்குனி மாதம் மீன லக்னத்தில் இங்கு அமைந்துள்ள சுனையிலிருந்து பேர நாதம் (மிருதங்க முழக்கம்) எழுவதால் பேரேஸ்வரம் என்று வழங்கப்படுகிறது. இதுவே பேரையூர் என்று மருவியதாகக் கூறப்படுகிறது.
ராகு தோஷ பரிகாரத்துக்கு திருநாகேஸ்வரத்துக்கும், கேது தோஷ நிவர்த்திக்கு திருக்காளஹஸ்திக்கும் செல்வதற்குப் பதில் பேரையூர் நாகநாதரைத் தரிசித்தால் இந்த இரு கிரகங்களின் தோஷங்களும் ஒன்றாக நீங்கும். இவ்விரு தோஷத்தின் காரணமாக, திருமணம் தடைபடுவோருக்கு தடைகள் நீங்கி திருமணம் இனிதே நடக்கும், குழந்தைப் பேறு உண்டாகும். மாங்கல்ய தோஷம் அகலும் என்றும் கூறப்படுகிறது.
நாகராஜன் வணங்கி வழிபட்ட தலம் என்பதால் இவ்வாலயத்தில் சுயம்பு மூர்த்தியாக வீற்றிருக்கக்கூடிய சிவபெருமான் நாகநாதர் எனவும் தாயார் பிரகதாம்பாள் எனவும் அழைக்கப்படுகின்றனர்.
சர்ப்ப தோஷம் நீங்க பிரம்மனும், இழந்த ஒளியை மீண்டும் பெற சூரியனும், நாகர் தலைவன் நாகராஜனும் ஈசனை வழிபட்ட திருத்தலம் என்பது இத்தலத்தின் சிறப்பாகும்.
இத்தல நாகநாதரை வழிபட்டால் எண்ணியவை எண்ணியபடி நிறைவேறும். பிரார்த்தனை கைகூடியவர்கள் கல்லால் ஆன நாகர் சிலையை நேர்த்திக்கடனாக இக்கோயிலில் செலுத்துவது வழக்கம். பக்தர்கள் இவ்வாறு செலுத்திய ஆயிரக்கணக்கான கல்லினால் ஆன நாக சிற்பங்கள் கோவில் வளாகம் முழுவதும் நிறைந்துள்ளது.
இக்கோயிலில் இறைவன், இறைவி இருவருக்கும் தனித்தனியே கொடிமரங்கள் அமைந்திருப்பது விசேஷம். தக்ஷிணாமூர்த்தி, துர்க்கை அம்மன், கால பைரவர், நவகிரகங்கள், வள்ளி தெய்வானை பாலசுப்பிரமணியரும் இத்திருத்தலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
வழக்கமாகக் கோயில்களில் உள்ள நவக்கிரகங்கள், வெவ்வேறு திசை பார்த்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும். இங்கு, 8 கிரகங்களும் சூரியனைப் பார்த்தே அமைக்கப்பட்டிருப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பு.