திருச்சிற்றம்பலம்
வாசி தீரவே, காசு நல்குவீர்
மாசின் மிழலையீர், ஏச லில்லையே
இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை, முறைமை நல்குமே.
செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர், உய்ய நல்குமே.
நீறு பூசினீர், ஏற தேறினீர்
கூறு மிழலையீர், பேறும் அருளுமே.
காமன் வேவவோர், தூமக் கண்ணினீர்
நாம மிழலையீர், சேமம் நல்குமே.
பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர்
அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே.
மங்கை பங்கினீர், துங்க மிழலையீர்
கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே.
அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர்
பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே.
அயனும் மாலுமாய், முயலும் முடியினீர்
இயலும் மிழலையீர், பயனும் அருளுமே.
பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்
வெறிகொள் மிழலையீர், பிரிவ தரியதே.
காழி மாநகர், வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே.
– திருஞானசம்பந்தர்
வாசி தீரவே பதிகத்தை திருஞானசம்பந்தர் திருவீழிமிழலை என்னும் தலத்தில் பாடி இறைவனிடமிருந்து படிக்காசு பெற்று, அப்பொற்காசுகளை விற்று பஞ்சத்தில் இருந்த மக்களுக்கு உணவளித்தார். இச்சிவாலயத்தின் மூலவர் வீழிநாதேஸ்வரர். தாயார் சுந்தரகுசாம்பிகை. இதனைப் பாடினால் தேடிய செல்வம் நிலைத்திருக்கும்; தேவையில்லாமல் கரையாது.
SHARE:
Share on facebook
Share on whatsapp
Share on telegram
Share on twitter
Share on linkedin
Share on email





